குளியாப்பிட்டியில் பாடசாலை வேன்–டிப்பர் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு, 13 பேர் காயம் – பொலிஸார் விசாரணை
குளியாப்பிட்டி, நிலபொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.இவ்விபத்து, மாணவர்கள் பயணித்த பாடசாலை வேன் மற்றும் எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில் ஏற்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மோதலின் பலத்தினால் பாடசாலை வேனில் பயணித்த மாணவர்களும், வாகன ஓட்டுநரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் 13 பேர் காயமடைந்து உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தோரில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்குக் காரணமான டிப்பர் வாகன ஓட்டுநர் காவலில் எடுக்கப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, டிப்பர் மற்றும் கனரக வாகனங்களுடன் தொடர்புடைய விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதை சமூக ஊடகங்களின் மூலமாக அடிக்கடி அறிந்துவருகிறோம். இதனை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் நேரங்களில் (காலை 6.00 முதல் 8.00 மணி வரை மற்றும் மதியம் 1.00 முதல் 3.00 மணி வரை) கனரக வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகியுள்ளது எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தச் சம்பவம் பிராந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













